புதன், 23 டிசம்பர், 2009

தெய்வத்தின் முன்னால்.......

உலகத்தின்
எளியவருக்காய்
வழிந்த
முதல் கண்ணீருக்கும்
இரத்தத்திற்கும்
உரிமையனவரே
உலகரட்சகரே!

என்னை மன்னித்துவிடும் .

பாவங்களைப் பொறுத்துக்கொள்ள
பரிசுத்தமாயிருக்க
என்னால் முடியாது .

ஒரு கன்னத்தில் அடித்தால்
மறு கன்னம் காட்ட சொன்னீர்
இருகன்னம் காட்டியும்
இரக்கம் காட்டவில்லை உலகம் . இனி
காட்ட கன்னமில்லை
கர்த்தரே!

என்னை மன்னித்துவிடும் .

முள்ளிடம் மென்மை போதிக்க
கல்லிடம் கருணை யாசிக்க
துரோகத்தை தலைக்கு வைத்துப்படுக்க

என்னால் முடியாது
என்னை மன்னித்துவிடும் தேவனே!

இறைவனே!
உன்
முன்னால் நான்
பாவியாக நின்றாலும்
அடக்குமுறைக்கு முன்
அடிமையாக மட்டும் நில்லேன்.



செவ்வாய், 22 டிசம்பர், 2009

கண்ணீரே விஷம்

என் இனியவளே!
இப்படி உன்னைக் கூப்பிட
எப்படியெல்லாமோ தவித்தவன்

கவிதை உன்னை
கைபடாமல் வாசித்தவன்

நேசம் சொல்ல
நெருங்கி வந்தவன் -உன்

மோச சொல்லில்
நொறுங்கிப் போனவன்

எழுதுகிறேன்
இல்லை... இல்லை..
அழுகிறேன்
என்பதே சரி.


மஞ்சள் காடுகளையும்
மயக்கிப் போகும்
உன் முகத்தில்
மௌனங்களை ஏனடி
பூசிக்கொண்டாய்?

அப்படி என்ன கேட்டுவிட்டேன்?

ஆசைக்கு முத்தமா கேட்டேன்?
ஆயுளுக்கும் அன்புதானடி கேட்டேன்


நீயும்....
நானும்.....

காத்திருந்தது -
கனவு கண்டது-
காதலித்தது-
எல்லாம் நிஜம்.
நீ பொய்யென்றால்
என் கண்ணீரே
எனக்கு விஷம்....!

மாற்றம்

உதயத்தில் தந்த சுகம் - சூரியன்
உச்சியில் தருவதில்லை
ஊற்றிலே வந்தசுவை - நீர்
ஆற்றிலே வருவதில்லை
மாற்றங்கள் புரிந்துகொண்டு -மனதை
தேற்றுங்கள் மனிதர்களே!